உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் பறிமுதலான போதை பொருட்களின் மதிப்பு ரூ.23.34 கோடி! 3 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் 6 பேர் கைது

பெங்களூரில் பறிமுதலான போதை பொருட்களின் மதிப்பு ரூ.23.34 கோடி! 3 இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் 6 பேர் கைது

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரை போதை பொருள் பயன்பாடு இல்லாத, நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், சி.சி.பி., போதை பொருள் தடுப்பு பிரிவு, நகர ஆயுதப்படை, சோகோ குழுக்கள், போலீசார் இணைந்து செயல்படுகின்றனர். கடந்த ஜனவரி முதல் தற்போது வரை, பெங்களூரில் போதை பொருள் விற்பனை தொடர்பாக 711 வழக்குகள் பதிவாகின. இவற்றில், 1,013 இந்தியர்கள், 35 வெளிநாட்டினர் என, 1,048 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 1,483 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த, 1ம் தேதி முதல் நேற்று (முன்தினம்) வரை பெங்களூரில் 23.84 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு வெளிநாட்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிப்டோ கரன்சி சாம்ராஜ்பேட்டில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் இருந்து பார்சல்கள் மூலம் போதை பொருள் வந்திருப்பதாக, கே.ஜி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களும், சி.சி.பி., போதை பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய சோதனையில் 1,399 கிலோ எம்.டி.எம்.ஏ., 2.30 லிட்டர் ஓபியம் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 4 கோடி ரூபாய். கிரிப்டோ கரன்சி மூலம் பணம் செலுத்தி, போதை பொருள் வாங்கியது தெரிந்தது. இந்த வழக்கில் தொட்டபல்லாபூரின் நாகதேனஹள்ளியின் சுரேஷ், அத்திப்பள்ளியின் அகில் சந்தோஷ், கனகபுராவின் சோமசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுபோல பரப்பன அக்ரஹாராவில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த லாபுராம், 35 என்பவர், தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து, 7 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 7 கோடி ரூபாய். ஆட்டோ ஓட்டுநரான லாபுராம், போதிய வருமானம் இல்லாததால், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து, ஹைட்ரோ கஞ்சா வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. 'டார்க்வெப்' இணையம் கொத்தனுார் அருகே எல்.ஜி.கொல்லஹள்ளி கிராமத்தில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் எம்.டி.எம்.ஏ., போதை பொருள் விற்கப்படுவதாக, வடகிழக்கு மண்டல டி.சி.பி., சஜித்துக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில், கொத்தனுார் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சோதனை நடத்திய போது, 4 கிலோ 815 கிராம் எம்.டி.எம்.ஏ., சிக்கியது. இதன்மதிப்பு 12.34 கோடி ரூபாய். இது தொடர்பாக, இரண்டு பெண்கள் மீதும், போதை பொருள் விற்பனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. அவர்கள் வெளிநாட்டினர் தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். டார்க்வெப் இணையம் மூலம், போதை பொருளை ஆர்டர் செய்து வாங்குவது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இதனால், அந்த இணையதளம் மீது கண் வைத்து உள்ளோம். வெளிநாட்டினர் தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டு உள்ள வெளிநாட்டினரை, அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவது குறித்து, வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். மொத்தமாக, பெங்களூரில் கடந்த ஏழு நாட்களில், 23.34 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மூன்று இடங்களில் நடந்த சோதனையில், வெளிநாட்டு பெண்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி