உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவானந்த நீலண்ணவர் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

சிவானந்த நீலண்ணவர் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

பெங்களூரு: ஆயிரக்கணக்கானோரிடம், பணம் வசூலித்து மோசடி செய்த சிவானந்த நீலண்ணவர் வழக்கில், அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெலகாவி நகரில், ‘சிவம் அசோசியேட்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்துபவர் சிவானந்த நீலண்ணவர். இவர் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஆசை காண்பித்து, பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து, மோசடி செய்தார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது வீடு, அலுவலகங்களில் பெலகாவியின் மாளமாருதி போலீசார் சோதனை நடத்தினர். ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில், 35,000 பேரிடம், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வசூலித்தது தெரிந்தது. அதன்பின் இந்த வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதால் அமலாக்கத்துறையும் விசாரணையில் ஈடுபட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிவானந்த நீலண்ணவரை கைது செய்தனர். அவரது வங்கி கணக்கில் இருந்த 2.02 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பெலகாவி, சிக்கோடி, நிப்பானியில் உள்ள சிவம் அசோசியேட்ஸ் நிறுவனங்கள் உட்பட அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சிவானந்த் நீலண்ணவர், 35,000 பேரிடம் 2,165 கோடி ரூபாய் வசூலித்து, மோசடி செய்துள்ளார். 185.95 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 25 கோடி ரூபாயை, கூட்டுறவு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகளின் அடிப்படையில், தனக்கு நெருக்கமானவர்கள் பெயரில் கடன் பெற்று, நிலம் வாங்கியுள்ளனர். மக்களிடம் வசூலித்த பணத்தை, ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்துள்ளார். தன் மனைவி மற்றும் மகனின் வங்கி கணக்குகளுக்கும், தன் நிறுவனங்களின் கணக்குகளுக்கும் பரிமாற்றம் செய்துள்ளார். ஐந்து கோடி ரூபாயை திரையுலகில் முதலீடு செய்திருப்பதையும் குற்றப்பத்திரிகையில் விவரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !