முடா வழக்கில் ரூ.21 கோடி சொத்துக்களை முடக்கிய ஈ.டி.,
பெங்களூரு: 'முடா' வழக்கில் மேலும் 21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு பற்றி, ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. முடா முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாரை கைது செய்தது. இந்நிலையில் நேற்று ஈ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்தராமையா உட்பட சிலர் தொடர்பான முடா வழக்கில், மேலும் 10 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதில் ஆறு நிலங்கள் முடா சட்டவிரோதமாக ஒதுக்கியது. முடா முன்னாள் தலைவர் மரிகவுடாவுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. முடக்கப்பட்ட சொத்துக்கள் மதிப்பு 20.85 கோடி ரூபாய். முடா முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில் அவரும், முன்னாள் தலைவர் மரிகவுடாவும் சேர்ந்து சட்டவிரோதமாக இடங்களை கையகப்படுத்தியது தெரிந்தது. இதுவரை 460 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.