உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐஸ்வர்யா கவுடா மீதான மோசடி வழக்கு துணை முதல்வர் தம்பிக்கு ஈ.டி., சம்மன்

ஐஸ்வர்யா கவுடா மீதான மோசடி வழக்கு துணை முதல்வர் தம்பிக்கு ஈ.டி., சம்மன்

பெங்களூரு: நகைக்கடையில் நகை வாங்கி மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடா வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி, துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷுக்கு, அமலாக்கத்துறை சம்மன் கொடுத்துள்ளது.மாண்டியாவின் மலவள்ளி கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 33. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கிறார். துணை முதல்வர் சிவகுமாரின் தம்பியும், பெங்களூரு ரூரல் முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷின் தங்கை என்று கூறி, நந்தினி லே - அவுட்டில் வனிதா என்பவர் நடத்தும் நகைக்கடையில் இருந்து, 8 கோடி ரூபாய்க்கு ஐஸ்வர்யா நகை வாங்கினார். பணம் கொடுக்காமல் மோசடி செய்தார்.இதுகுறித்து கடந்த டிசம்பர் 28ம் தேதி, வனிதா அளித்த புகாரில் ஐஸ்வர்யா, அவரது கணவர் ஹரிஷ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கன்னட நடிகர் தர்மேந்திராவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஐஸ்வர்யா மீது மேலும் சில மோசடி புகார்கள் குவிந்தன.

சோதனை

ஐஸ்வர்யா சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிந்ததால், அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த ஏப்ரல் 24ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ஐஸ்வர்யாவுக்கு, தார்வாட் ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது.இதனால் விசாரணைக்கு ஆஜராக வினய் குல்கர்னிக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி துணை முதல்வர் சிவகுமார் தம்பியான, முன்னாள் எம்.பி., சுரேஷுக்கும் அமலாக்கத்துறை நேற்று சம்மன் கொடுத்துள்ளது.இதுகுறித்து பெங்களூரில் சுரேஷ் நேற்று அளித்த பேட்டி:சொந்த வேலையாக வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தேன். வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்திருப்பதாக வீட்டு பணியாளர்கள் கூறினர். நான் வீட்டிற்கு சென்று, அதிகாரிகளிடம் பேசியபோது, விசாரணைக்கு ஆஜராக சம்மன் கொடுத்தனர். அந்த சம்மனை பார்த்தபோது, ஐஸ்வர்யா கவுடா வழக்கு தொடர்பானது என்று தெரிந்தது.வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அன்றைய தினம் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால், வரும் 23ம் தேதி ஆஜராகிறேன் என்று கூறினேன். இதுதொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கூறினர். நானும் அப்படியே செய்தேன்.ஐஸ்வர்யா கவுடா மோசடி தொடர்பாக, என்னிடம் சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராவேன். நான் எம்.பி.,யாக இருந்தபோது, ஐஸ்வர்யா ஏற்பாடு செய்திருந்த இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன். அதைவிட்டு அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.என் பெயரை பயன்படுத்தி ஐஸ்வர்யா மோசடி செய்தபோது, போலீஸ் கமிஷனரிடம் சென்று புகார் கொடுத்தேன். இப்போது அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுவது எனக்கு புதிது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''என் சகோதரர் சுரேஷ் பெயரை பயன்படுத்தி, ஐஸ்வர்யா கவுடா என்ற பெண் மோசடி செய்து உள்ளார். அந்த பெண்ணால் பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர், என்னை சந்தித்து நியாயம் வேண்டும் என்று கேட்டனர். ஐஸ்வர்யா மீது சுரேஷ் ஏற்கனவே போலீசில் புகார் செய்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர் ஆஜராகி விளக்கம் அளிப்பார். எனக்கும், சுரேஷுக்கும் அமலாக்கத்துறை விசாரணை புதிது இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !