மகன், மருமகளால் சித்ரவதை கருணை கொலைக்கு முதியவர் மனு
துமகூரு: தன் சொத்துகளை எழுதி வாங்கியதுடன், தினமும் மகனும், மருமகளும் அடித்துத் துன்புறுத்துவதால், மனம் நொந்த முதியவர் ஒருவர், தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.துமகூரின் கோடி திம்மனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ராமையா, 70. இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ராமையாவுக்கு சொந்த வீடும், வசந்தநரசாபுரா அருகில் இரண்டு ஏக்கர் நிலமும் உள்ளது.மூன்று மாதங்களுக்கு முன்பு, இவரது மனைவி காலமானார். மனைவி இருக்கும்போதே, மகனும், மருமகளும் கொடுமைப்படுத்தினர். இப்போது இவர்களின் தொல்லை மேலும் அதிகரித்தது. சொத்துக்களை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டனர்.வசந்தபுரா அருகில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, கர்நாடக தொழிற்பகுதி மேம்பாட்டு ஆணையம், நிலங்களை கையகப்படுத்தியது. இதில் ராமையாவின் இரண்டு ஏக்கர் நிலமும் அடங்கும். நிலத்தை கையகப்படுத்தி, நிவாரணமும் வழங்கப்பட்டது. இந்த பணத்தையும் மகனும், மருமகளும் பறித்துக் கொண்டனர்.இப்போது வீட்டை விட்டுச் செல்லும்படி, தினமும் ராமையாவை தாக்கி சித்ரவதை செய்கின்றனர். மனம் நொந்த அவர், 'எனக்கு நியாயம் வேண்டும். இல்லையென்றால் சாக விரும்புகிறேன். என்னை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்' என, துமகூரு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.