சோலார் மின் வேலியை தகர்த்து பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
பங்கார்பேட்டை: ஆந்திரா, தமிழக வனப் பகுதியில் இருந்து யானைகள் பங்கார்பேட்டையின் பூதிக்கோட்டை, காமசமுத்ரா பகுதியில், 'சோலார் மின் வேலி'யை தகர்த்து எறிந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி வனப்பகுதியில் இருந்தும், ஆந்திர மாநிலம், குப்பம் வனப்பகுதியில் இருந்தும் யானைகள் கர்நாடகா பங்கார்பேட்டையின் காமசமுத்திரா, பூதிக்கோட்டை வனப்பகுதி உள்ளிட்ட கிராம வயல்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.யானைகள் வராமல் தடுக்க கர்நாடகா வனத்துறையினர் சோலார் மின் வேலிகள் அமைத்துள்ளனர். ஆயினும், யானைகள் எளிதாக நுழைந்து விடுகின்றன. எனவே, யானைகள் நுழையாமல் தடுக்க பலமான காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டும். யானைகள் சுவர் ஏறாதபடி அகண்ட ஆழமான கால்வாய்களை ஏற்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் காமசமுத்ரா, பூதிக்கோட்டை பகுதியில் உருளை கிழங்கு, குடைமிளகாய், பீன்ஸ், தக்காளி, அவரை, கேழ்வரகு பயிர்கள் நாசமாயின. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.