காபி தோட்டத்தை மிதித்து வீணாக்கிய யானைகள்
சிக்கமகளூரு: காட்டுயானைகளின் தொந்தரவால், விவசாயிகள் பரிதவிக்கின்றனர். 3 ஏக்கர் காபி தோட்டத்தை, யானைகள் மிதித்து வீணாக்கியதால் விவசாயி கண்ணீர் விட்டு கதறினார். சிக்கமகளூரு, ஹாசன், குடகு உட்பட பல்வேறு மலைப்பிரதேச மாவட்டங்களில் காட்டு யானை களின் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், விவசாயிகளின் வயல், தோட்டங்களை மிதித்து துவம்சம் செய்கின்றன; பயிர்களை சேதப்படுத்துகின்றன. சிக்கமகளூரில் நேற்று முன்தினம் ஒன்றரை ஏக்கர் நிலத்தை, காட்டு யானைகள் பாழாக்கின. மூடிகெரே தாலுகாவின் கார்கல் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. பிரஹலாத் என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் காபி தோட்டத்தில் நுழைந்து, காபி செடிகளை மிதித்து சேதப்படுத்தின. தோட்டம் பாழாகி கிடப்பதை பார்த்து, வருத்தமடைந்த பிரஹலாத், கண்ணீர் விட்டு அழுதார். ‘குழந்தைகளை போல வளர்த்த காபி செடிகளை, யானைகள் துவம்சம் செய்துள்ளன. என்னையும் யானைகள் மிதித்து கொல்லட்டும். மூன்று ஏக்கர் காபி தோட்டத்தை நம்பி, நாங்கள் வாழ்கிறோம்’ என்றார். தகவலறிந்து கிராமத்தினர் அங்கு குவிந்தனர். வனத்துறை அதிகாரிகள், பிரஹலாத்தை சமாதானம் செய்தனர். 39 யானைகள் கூட்டம் நான்காக பிரிந்து, மூடிகெரேவில் பல்வேறு கிராமங்களில் நுழைந்து, மக்களை அச்சுறுத்துகின்றன. மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், யானைகளை பிடிக்கும்படி கிராமத்தினர், வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றனர்.
50 வயது நபர் சாவு
குடகு மாவட்டத்தின் தாரிகட்டே கிராமத்தில் வசித்தவர் கேசவய்யா, 50. இவர் நேற்று அதிகாலை, வழக்கம் போல நேற்று காலையில் தன் தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு யானை, பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.