தகவல் தராமல் அலட்சியம் பொறியாளருக்கு அபராதம்
பெங்களூரு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் தெரிவிக்க மறுத்த மற்றும் தகவல் உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும் ஆஜராகாத பெங்களூரு மாநகராட்சி செயல் நிர்வாக பொறியாளருக்கு, மாநில தகவல் உரிமை ஆணையம் 25,000 ரூபாய் அபராதம் விதித்தது.பெங்களூரின், பசவேஸ்வரா நகரில் வசிக்கும் ரவிகுமார் என்பவர், பேட்ராயனபுரா பிரிவு எல்லைக்கு உட்பட்ட அலுவலகத்தில் நடந்த பணிகள் குறித்து, தகவல் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 2024 அக்டோபர் 25ல் மனு அளித்தார்.இந்த சட்டத்தின் கீழ், தகவல் கோரினால் 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து, உயர் அதிகாரியிடம் பல முறை ரவிகுமார் மேல் முறையீடு செய்தும், தகவல் தெரிவிக்காமல் அலட்சியப்படுத்தினார். எனவே, மாநில தகவல் உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.மனு தொடர்பாக, நடப்பாண்டு மார்ச் 27 மற்றும் மே 6ம் தேதியன்றும், ஆணையத்தில் விசாரணை நடந்தது.தகவல் தெரிவிக்காதது ஏன் என, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பேட்ராயனபுரா செயல் நிர்வாக பொறியாளர் பிரதீப்புக்கு, தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்த விஷயத்தை, மாநகராட்சி தலைமை கமிஷனரிடம் தெரிவித்தும் பதில் இல்லை.இதனால், அதிருப்தி அடைந்த தகவல் உரிமை ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் தெரிவிக்க மறுத்த, தகவல் உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும் ஆஜராகாத, செயல் நிர்வாக பொறியாளர் பிரதீப்புக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. மனுதாரருக்கு 3,000 நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டது.அபராத தொகையை, பொறியாளர் பிரதீப்பின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, சம்பந்தப்பட்ட கணக்கில் செலுத்தும்படி, மாநகராட்சிக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.