வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி எஸ்.ஐ.,
வித்யாரண்யபுரா: வாகன ஓட்டிகள், கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்த போலி எஸ்.ஐ., உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூரு வித்யாரண்யபுராவில் வசிப்பவர் நவீன். கடந்த 7ம் தேதி இவரது வீட்டிற்கு போலீஸ் சீருடை அணிந்து சென்ற ஒருவர், தன்னை எஸ்.ஐ., என்று கூறினார். 'நீங்கள் போதை பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்து உள்ளது. விசாரணைக்கு வர வேண்டும்' என்று நவீனிடம் கூறி உள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் இரும்பு கம்பி, தடியால் நவீனை, சீருடை அணிந்திருந்த நபர் தாக்கினார். நவீனிடம் இருந்து 87,000 ரூபாயை தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிவிட்டு சென்றார். இதுகுறித்து நவீன் அளித்த புகாரில் வித்யரண்யபுரா போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல்லாரியை சேர்ந்தவரும், பெங்களூரு காமாட்சிபாளையாவில் வசிப்பவருமான மல்லண்ணா என்பவர், நவீனை தாக்கியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி நண்பர்களான பிரமோத், வினய், ரித்விக் கைது செய்யப்பட்டனர். இரண்டு முறை எஸ்.ஐ., தேர்வு எழுதிய தோல்வி அடைந்த மல்லண்ணா, தேர்வில் வெற்றி பெற்றதாக தான் வசித்து வரும் பகுதியில் கூறி உள்ளார். போலீஸ் சீருடை அணிந்து வலம் வந்த அவர், கடைக்காரர்கள், வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்ததும், நவீன் பார்ட்டிக்கு அடிக்கடி செல்வது பற்றி அறிந்த மல்லண்ணா, அவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்து உள்ளது. இவரது வங்கிக்கணக்கில் இருந்த 50,000 ரூபாயை போலீசார் மீட்டு உள்ளனர்.