பல திட்டங்கள் அளித்தும் விவசாயிகள் தற்கொலை கர்நாடகாவில் அதிகரிப்பு
பெங்களூரு: விவசாயிகளின் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தியும், கர்நாடகாவில் ஒரே ஆண்டில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் நன்மையை கருதி, மத்திய, மாநில அரசுகள், இலவச மின்சாரம், வட்டியில்லா பயிர்க்கடன், தோட்டக்கலை, பட்டு மற்றும் கால்நடைத்துறை மூலமாக நிதியுதவி என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. வாக்குறுதி திட்டங்கள் மூலமாகவும், மக்களுக்கு உதவுகின்றன. ஆனாலும், விவசாயிகளின் தற்கொலை நிற்கவில்லை. கர்நாடகாவில், கடந்த ஒரே ஆண்டில், கடன் தொல்லை, விளைச்சல் சேதம் போன்ற காரணங்களால், 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இவர்களில் 807 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 138 விவசாயிகள் கடன் தொல்லை அல்லது பயிர் இழப்பால் தற்கொலை செய்யவில்லை. இதற்கு வேறு காரணங்கள் உள்ளன. எனவே இவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்க மறுத்துள்ளது. பாக்கியுள்ள விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.