மகளை கணவருடன் அனுப்புவதற்கு 36 நிபந்தனைகள் விதித்த மாமனார்
ராய்ச்சூர்: மகளை கணவருடன் வாழ அனுப்புவதற்கு மாமனார், 36 நிபந்தனைகளை விதித்துள்ளார். இதனால், மூன்று ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர்.ஆந்திராவின், அனந்தபூர் மாவட்டம், ராயதுர்கா தாலுகாவை சேர்ந்தவர் பிரம்மானந்தா, 30. இவருக்கும், கர்நாடகாவின் ராய்ச்சூர் நகரில் வசிக்கும் உதயகுமார் என்பவரின் மகள் ஸ்வப்னா, 25, என்பவருக்கும் 2021ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.கடந்த 2022ம் ஆண்டு உதயகுமார் குடும்பத்தினர், ராயதுர்காவுக்கு சென்றனர். 'சில நாட்கள் மகளும், பேரனும் தங்களுடன் இருக்கட்டும்' என, அழைத்துச் சென்றனர். மூன்று ஆண்டுகளாகியும் அவர்களை பிரம்மானந்தாவிடம் அனுப்பவில்லை.பல முறை, மாமனார் வீட்டுக்கு சென்று, மனைவி, குழந்தையை அனுப்பும்படி பிரம்மானந்தா மன்றாடியும், உதயகுமார் சம்மதிக்கவில்லை. மனைவியையும், மகனையும் பார்க்கவும் அவரை அனுமதிக்கவில்லை. 'மகளை அனுப்ப வேண்டுமானால், என் 36 நிபந்தனைகளுக்கு சம்மதிக்க வேண்டும்' என, பிடிவாதம் பிடிக்கிறார்.அதன் விபரம்:பெற்றோரை பிரிந்து, மகளுடன் தனி குடித்தனம் செய்ய வேண்டும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும், மாதந்தோறும் சம்பாதித்த பணத்துக்கு என்னிடம் கணக்கு காட்ட வேண்டும். அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரையும் ஒருமையில் பேசக்கூடாது. உன் வாழ்க்கையில் உன் சகோதரிகள் தலையிட கூடாது.அனைத்துக்கும் கடவுள், கடவுள் என கூறாமல் பணம் சம்பாதி. என் மகள் ஸ்வப்னா, ராயதுர்காவுக்கு வந்து, அவருக்கு ஏதாவது நடந்தால் நீயும், உன் குடும்பத்தினருமே பொறுப்பு. திருமணத்துக்கு முன், தினமும் 5,000 முதல் 8,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறினாய். மாதந்தோறும் 50,000 ரூபாயை உன் மனைவி கணக்கில் செலுத்த வேண்டும்.நீ மட்டுமே சக்தி வாய்ந்தவன் போன்று பேசுகிறாய். உன் தாய், தந்தையையும் மரியாதை குறைவாக பேசுகிறாய். அதேபோன்று எங்களையும் பேசுகிறாய். வெளியிலும் இப்படி பேசி, உனக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால், யார் பொறுப்பு? உன் மீது எங்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.திருமணமாகி இரண்டு, மூன்று மாதங்களுக்கு பின், மகளை எங்கள் வீட்டுக்கு அனுப்புவதாக கூறினாய். ஆனால், அனுப்பவில்லை. சிறையில் வைத்திருப்பதை போன்று, அடைத்து வைத்திருக்கிறாய். என் மகள் கர்ப்பமாக இருந்தபோதும், அனைத்து வேலைகளையும் அவளே செய்துள்ளார். வெளியிலும் அனுப்பவில்லை. என் நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் மட்டுமே, என் மகளை உன்னுடன் அனுப்புவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மாமனாரின் நிபந்தனைகளை கேட்டு, பிரம்மானந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். மூன்று ஆண்டுகளாக மனைவிக்காக காத்திருக்கிறார்.