அதிகாரியின் தொல்லை பெண் ஊழியர் ராஜினாமா
மங்களூரு: மேலதிகாரியின் பாலியல் தொல்லையால், வெறுப்படைந்த பெண் ஊழியர் ராஜினாமா கடிதத்தை, அந்த அதிகாரியின் முகத்தில் வீசி எறிந்தார். தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகா மருத்துவமனையின், மருந்துகள் சேகரிப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றுபவர் சந்திரசேகர், 48. இவர், இங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பற்றி யாரிடமாவது புகார் அளித்தால், பணியில் இருந்து நீக்குவதாக மிரட்டியதாக கூறுகின்றனர். பணிக்கு ஆபத்து வரும் என்பதால், இவரது தொல்லையை, பெண்கள் சகித்து கொண்டிருந்தனர். இதற்கு முன்பும் இவர் மீது, இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது. இவரை பணி நீக்கம் செய்யும்படி பலரும் வலியுறுத்தினர். ஆனால் உயர் அதிகாரிகள் சிலர், சந்திரசேகருக்கு ஆதரவாக இருப்பதால், 25 ஆண்டுகளாக இதே பணியில் நீடிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவரது தொல்லை தாங்க முடியாமல் போனதால், கோபமடைந்த ஒரு பெண் ஊழியர், நேற்று முன்தினம் ராஜினாமா கடிதத்தை சந்திரசேகரின் முகத்தில் வீசி எறிந்தார். மேலும், இவர் மீது பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த சந்திரசேகர் தலைமறைவாகிவிட்டார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, இவரை தேடுகின்றனர்.