ரூ.1,280 கடன் தவணைக்காக சிறுமியை துாக்கிய நிதி நிறுவனம்
மைசூரு: கடன் தவணை கட்டவில்லை என்பதால், நபரின் ஏழு வயது சிறுமியை நிதி நிறுவன ஊழியர்கள் அழைத்துச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின் ஜாலஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன். இவரது மனைவி பிரமிளா. இத்தம்பதிக்கு ஏழு வயதில் மகள் உள்ளார். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் தம்பதி 30,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். மாதந்தோறும் 1,280 ரூபாய் தவணை கட்ட வேண்டும். 13 மாதங்கள் சரியாக கட்டினர். இந்த மாதம் கட்ட முடியவில்லை; நான்கு நாட்கள் தாமதமாகின. தவணை தொகையை கேட்டு, நேற்று முன் தினம் நவீனின் வீட்டுக்கு நிதி நிறுவன ஊழியர்கள் வந்தனர். அப்போது நவீனின் மனைவியும், மகளும் மட்டும் வீட்டில் இருந்தனர். தவணை செலுத்தும்படி கேட்டனர். அவகாசம் கேட்டும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சிறுமியை அழைத்துச் சென்றனர்.இதையறிந்து நவீன் அதிர்ச்சி அடைந்தார். மைசூரு நகரின் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியிடம் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த கமிட்டி அதிகாரிகள், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நிதி நிறுவனத்தினரை எச்சரித்தனர்.