மெட்ரோ ரயிலில் குட்கா பயன்படுத்தினால் அபராதம்
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில்கள் மற்றும் நிலையங்களில் புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மெட்ரோ ரயில்கள், நிலையங்களில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை மென்று, சிலர் கண்ட இடங்களில் துப்புவதாக பயணியரிடம் இருந்து தொடர்ந்து மெட்ரோ நிறுவனத்துக்கு புகார்கள் சென்றன. சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயிலில் நபர் ஒருவர் பான் மசாலா தின்றதும், அவரை சக பயணியர் திட்டி கண்டித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இந்த நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ நிலையங்கள், ரயில்களில் பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோ ரயில் நிலைய வளாகம், மெட்ரோ ரயில்களில் உமிழ்வது, குப்பை போடுவது, பான் மசாலா, குட்கா மென்று துப்புவோரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படும். இதற்காக ரோந்து அதிகரிக்கப்படும்.பயணியர் குட்கா, பான் மசாலா பயன்படுத்துவது தெரிந்தால் அபராதம் விதிக்கப்படும். உலோக பரிசோதனை இயந்திரங்களால், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடிக்க முடியாது. எனவே மெட்ரோ நிலையங்களில் ஆங்காங்கே சோதனை நடத்தப்படும்.குட்கா, பான் மசாலா மெல்லும் பயணியரை கண்டுபிடிக்கவும், பயணியருடன் நல்ல முறையில் பழகுவது குறித்தும், பிளாட்பாரம் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.விதிமீறலாக நடந்து கொள்ளும் பயணியரை எச்சரிக்க வேண்டும் என, பிளாட்பாரம் பாதுகாப்பு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குட்கா பாக்கு உற்பத்திகளை பயன்படுத்த கூடாது என, பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.