சிறுவர்களை ஈர்த்த மீன் கண்காட்சி நிறைவு
மைசூரு : மைசூரு தசராவுக்காக நகரின் ஜெ.கே., மைதானத்தில் மீன் கண்காட்சி கடந்த 25ம் தேதி துவங்கப்பட்டது. இந்த கண்காட்சி நான்கு நாட்கள் நடந்து, நேற்றுடன் முடிவடைந்தது. காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் மீன் கண்காட்சியை பார்க்க, பார்வையாளர்கள் திரளாக வருகை தந்தனர். இந்த கண்காட்சியை மீன்வளத்துறை நடத்தியது. அலங்கார மீன்கள், வெளிநாட்டு மீன்கள், நன்னீரில் வாழும் மீன்கள், கடலில் வாழும் மீன்கள் என பல வகையான மீன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அரோவனா, டெவில், டைகர் ஷார்க், டைகர் பார்ப், கிளி மீன், ஆஸ்கர், கோல்ட் பிஷ், மிர்கல் போன்ற வண்ண, வண்ண மீன்களை சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இம்முறை இளைஞர்கள், மீன் வளர்ப்பு தொழிலுக்குள் வர வேண்டும் என்பதை ஊக்குவிப்பதை கருப்பொருளாக எடுத்து கொண்டு நடத்தப்பட்டது. மீன் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் கண்காட்சி அரங்கில் நடத்தப்பட்டன. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி, மீன்வளத்துறை அதிகாரிகள், மீன்களின் குணாதிசயங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இதை பலரும் ஆர்வமுடன் கேட்டனர். கண்காட்சியை பார்க்க அனுமதி இலவசம் என்பதால், கடைசி நாளான நேற்று வழக்கத்தை விட கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. கண்காட்சி அரங்கின் அருகில், கடல் உணவுகள் சமைத்து கொடுக்கும் கடையில், கூட்டம் அலைமோதியது. பலரும் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர்.