காம்பவுண்ட் சுவர் இடிந்து ஐந்து வயது சிறுவன் பலி
பாகலுார்: வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி, 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். யாத்கிரை சேர்ந்தவர் தாவல் சாப். இவரது மகன் அபின், 5. வாடகை கார் டிரைவரான தாவல் சாப், வேலை தேடி, கடந்த, 13ம் தேதி பெங்களூருக்கு வந்தார். மனைவி, மகனுடன், பாகலுார் பண்டிகோடிகேஹள்ளியில் உள்ள சகோதரி வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு அபின், வீட்டின் வெளியே விளையாடினார். பக்கத்து வீட்டின் இரும்பு கதவு மீது ஏறி நின்றார். அப்போது பாரம் தாங்காமல் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து, அபின் மீதும், பக்கத்தில் நின்ற சமன்வி, 3, என்ற பெண் குழந்தை மீதும் விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இடிபாடுகளில் சிக்கிய அபின், சமன்வியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயம் அடைந்த அபின் இறந்தார். சமன்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளர் நரசப்பா மீது, பாகலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.