கார்கே பிரதமராக முயற்சிப்பது நல்லது மாஜி முதல்வர் சதானந்த கவுடா கிண்டல்
பெங்களூரு: ''காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வராக முயற்சிப்பதை விடுத்து, பிரதமராவதில் கவனம் செலுத்தலாம்,'' என, பா.ஜ., முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தர்மஸ்தலாவில் புதைக்கப்பட்ட சடலங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நான் முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். எனவே, சட்டம், அதன் கடமையை செய்யும். விசாரணை நடக்கும்போது, எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. கட்சியை சுத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. நாங்கள் தண்ணீர், சோப்பு போட்டுள்ளோம். விஜயேந்திராவுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.,க்கள், கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க புதுடில்லி செல்ல உள்ளதாக கூறி உள்ளனர். தனித்தனியாகவோ அல்லது கூட்டமாக கூட செல்லலாம். முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தால், இதுவரை தான் செய்த பணிகள் பயனற்றுப் போனதாக கருதாமல், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் மாநில அரசியலுக்கு வருவது அவரின் மதிப்புக்கு உகந்ததல்ல. கர்நாடகாவில் உரம் தட்டுப்பாட்டில் ஏற்பட்ட குளறுபடிக்கு மாநில அரசு தான் காரணம். உரம் விற்பனை கடை முன், விவசாயிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். மழை எங்கு அதிகளவில் பெய்கிறதோ, அங்கு முதலில் உரங்களை வழங்கியிருக்க வேண்டும். உரங்கள் சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை வேளாண் துறை அமைச்சரும், அதிகாரிகளும் முன்னின்று கவனிக்க வேண்டும். அத்துடன், இந்தாண்டு முன்னதாகவே மழை துவங்கிவிட்டது. பெங்களூரிலேயே 'இந்திய வேளாண் உரம் கூட்டுறவு லிமிடெட்' உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. சரியாக வருமா என்ற குழப்பத்தில் உரம் வாங்க, விவசாயிகள் தயங்குகின்றனர். இங்கு தயாராகும் உரம் நன்றாக உள்ளது. உரங்களை மறைத்து வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். மாநில அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.