உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜெயநகர் தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை விசாரணைக்கு ஆஜரான மாஜி எம்.எல்.ஏ.,

 ஜெயநகர் தொகுதி மறு ஓட்டு எண்ணிக்கை விசாரணைக்கு ஆஜரான மாஜி எம்.எல்.ஏ.,

பெங்களூரு: தேர்தல் மறு ஓட்டு எண்ணிக்கை வழக்கில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சவுமியா ரெட்டி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். கர்நாடகாவில் 2023 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மே 13ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டன. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் மொத்தம் 827 தபால் ஓட்டுகள் பதிவாகின. இவற்றில், 198 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டன. 629 ஓட்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. அவற்றில், காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கு 164 ஓட்டுகளும்; பா.ஜ., வேட்பாளர் ராமமூர்த்திக்கு 415 ஓட்டுகளும் பதிவாகியிருந்தன. கடைசியாக 16 சுற்று ஓட்டு எண்ணிக்கைக்கு பின், ராமமூர்த்தி 57,297 ஓட்டுகளும், சவுமியா ரெட்டி 57,591 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் 294 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இருப்பினும் நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகளை மறு சரிபார்ப்பு செய்ய, தேர்தல் பார்வையாளர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள், மறு சரிபார்ப்பு செய்யப்பட்டன. இறுதியாக, பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை கேள்விக்கு உட்படுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சவுமியா ரெட்டி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், '827 தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண உத்தரவிட வேண்டும். செல்லாத ஓட்டுகளை பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., வேட்பாளரின் தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனு மீதான விசாரணை நீதிபதி ராச்சையா முன் விசாரணை நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, சவுமியா ரெட்டி ஆஜராகினார். அப்போது நடந்த விவாதம்: பா.ஜ., வேட்பாளர் சார்பு வக்கீல்: உங்களின் கோரிக்கையின்படி, தேர்தல் அதிகாரியும், தேர்தல் பார்வையாளர்களும் நிராகரிக்கப்பட்ட 198 தபால் ஓட்டுகளை மீண்டும் சரிபார்த்து, அவற்றில் 124 ஓட்டுகள் செல்லுபடியாகும் என்று தீர்மானித்தனர். மொத்த ஓட்டுகளை மீண்டும் எண்ணி, சரிபார்த்த பின்னரே, ராமமூர்த்தி 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்,'' என்றார். சவுமியா ரெட்டி: தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்களின் அறிவிப்பு தொழில்நுட்ப ரீதியாக சரியானது. இருப்பினும், ஓட்டுகளை மீண்டும் எண்ணி, மறு சரிபார்ப்பு செய்யும் செயல்முறை முற்றிலும் சட்ட விரோதமானது என்பதே எனது வலுவான ஆட்சேபனையாக இருந்தது. அதனால் தான் உயர் நீதிமன்றத்தை நாடினேன். நான், 42 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஊடகங்களில் செய்தி பரவியது. அதை பார்த்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்தேன். நான் அங்கு சென்றபோது தான், இந்த சர்ச்சையும், குழப்பமும் துவங்கியது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்., 6ம் தேதி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை