எங்கள் சக்தியை பா.ஜ., பயன்படுத்தும் மாஜி பிரதமர் தேவகவுடா நம்பிக்கை
விஜயபுரா: ''குமாரசாமியை மீண்டும் முதல்வராக்குவது, என் கையில் இல்லை. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், முடிவு செய்ய வேண்டும்,'' என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார். ம.ஜ.த.,வின் வெள்ளி விழாவை முன்னிட்டு, விஜயபுராவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், தேவகவுடா பேசியதாவது: 93 வயது எங்கள் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளிக்கும் சக்தியை, அடையாளம் கண்டு பயன்படுத்தும் அரசியல் சாமர்த்தியம் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு ஏற்கனவே 93 வயதாகிறது. எனக்கு அமைச்சர், முதல்வராகும் ஆசை இல்லை. இந்த சரீரத்தில் இருந்து, ஆத்மா வெளியே செல்லும் முன், மாநிலத்தில் நல்லாட்சி அளிக்கும் அரசு அமையும். அதை பிரதமர் மோடி செய்வார். அலமாட்டி அணையை, 524 மீட்டராக உயர்த்த, தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இதை செயல்படுத்த போராட்டம் நடத்துவோம். மைசூரு, கித்துார், கல்யாண கர்நாடகா என, மூன்று பாகமாக பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒரே தாயின் பிள்ளைகள். ஒன்றாக வாழலாம். மக்களுக்கு இ லவச திட்டங்கள் தேவையில்லை. உழைக்கும் கைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு தேவை. குமாரசாமியை மீண்டும் முதல்வராக்குவது, என் கையில் இல்லை. இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். வளர்ச்சி பாதிப்பு மத்திய அமைச்சர் குமாரசாமி பேசியதாவது: காங்கிரசின் ஆட்சியால், வளமான கர்நாடகா பாழாகிறது. அனைத்திலும் கொள்ளை அடிக்கின்றனர். அரசில் கமிஷன் பெறுவதாக, ஒப்பந்ததாரர்களே குற்றம்சாட்டுகின்றனர். மாநிலத்தில் வளர்ச்சி நின்றுள்ளது. காங்., வழங்கும் 2,000 ரூபாயை பார்த்து, பெண்கள் ஏமாறாதீர்கள். மின் கட்டணம், கலால் வரியை உயர்த்தியுள்ளனர். வரி வடிவில் 2,000 ரூபாயை பறித்து கொள்ளும். மாநில அரசு ஏற்கனவே 7.65 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது. தற்போது மீண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளனர். இதை அடைப்பது யார். மக்களின் தலையில் கடன் சுமை ஏற்படும். வாக்குறுதி திட்டங்கள், அரசுக்கு சுமையாக உள்ளது. இதனால் வசதி படைத்தவர்கள், திட்டங்களை விட்டுத்தரும்படி கேட்கின்றனர். இவ்வாறு பேசினார்.