உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ்களில்... இலவசம்!: எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரை பலன்: துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ்களில்... இலவசம்!: எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரை பலன்: துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு

பெங்களூரு: 'கர்நாடகாவின் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல் பி.யு.சி, வரை படிக்கும் மாணவர்கள், அரசு பஸ்களில் இனி இலவசமாக பயணம் செய்யலாம்' என, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைவர். இது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்தல், ஆசிரியர்கள் பற்றாக்குறை, பாடம் கற்பிப்பதில் தோய்வு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் விரும்புவதில்லை.இந்த நிலையை மாற்ற முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க, தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 35லிருந்து 33ஆக குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இலவச பயணம்

இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த மிக முக்கியமான முடிவு குறித்து, நேற்று துணை முதல்வர் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:கர்நாடகாவில் அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., கல்லுாரிகள் வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இனி அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை அதிகரிக்க முடியும்.பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களை கல்வி, நிதி ரீதியாக மேம்படுத்துவது அரசின் முக்கிய நோக்கம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இது அரசின் துணிச்சலான முடிவுகளில் ஒன்று.இதன் மூலம் ஆயிரக்கணக்கிலான ஏழை மாணவர்கள் நிச்சயம் பயனடைவர். அதுமட்டுமின்றி மாணவர்கள் வசதியாக தினமும் பஸ்களில் வந்து செல்லலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சரவை

இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:கர்நாடகாவில் மாணவியர் ஏற்கனவே பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் உள்ளது. தற்போது, அரசு பஸ்களில் மாணவர்களும் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக, அவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும்.இந்த முடிவு, அரசு பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களின் கல்வியை மேம்படுத்தும். இத்திட்டம் குறித்து துணை முதல்வர் சிவகுமார் என்னிடம் பேசினார். திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவுரைகளை வழங்கினார்.இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் செலவாகும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதலில் நிதித் துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும். பிறகு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். இதன் பிறகே, இத்திட்டம் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இடைநிற்றல் குறையும்!

இத்திட்டம் துவங்கும் நாள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கல்வித் துறையும் விரிவான ஒரு திட்டத்தை தயார் செய்து வருகிறது. இத்திட்டம் மூலம் எண்ணற்ற ஏழை மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், நீண்ட துாரம் பயணம் செய்து பள்ளிக்கு வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைவர்.வழக்கமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும், போக்குவரத்தில் ஏற்படும் பிரச்னைகளால் பள்ளியை விட்டு இடைநிற்றல் ஆகிய மாணவர்களின் விகிதம் குறையும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி