15ம் தேதி முதல் போராட்டம் குப்பை வாகன ஓட்டுநர்கள் அறிவிப்பு
பெங்களூரு : பணியை நிரந்தரமாக்க வலியுறுத்தி, வரும் 15ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாக பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அறிவித்துள்ளனர். பெங்களூரில் ஏற்கனவே குப்பை பிரச்னையால், மக்கள் அவதிப்படுகின்றனர். பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதை காண முடிகிறது. இதற்கிடையே பணியை நிரந்தரமாக்க வலியுறுத்தி, குப்பை லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் வரும் 15ம் தேதி முதல், வேலை நிறுத்த போராட்டத்தை துவக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, குப்பை லாரி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கூறியதாவது: பெங்களூரில் தினமும், 4,000 குப்பை ஆட்டோக்கள், வீடு வீடாக குப்பை சேகரித்து, மேலாண்மை மையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகின்றன. 10,000 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக பணியாற்றும் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நடப்பாண்டு ஏப்ரலில், முதல்வர் சித்தராமையா, மாநிலத்தின் பல்வேறு நகராட்சிகளின், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதாக அறிவித்தார். ஆனால் இந்த சலுகை குப்பை வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் தினமும் அபாயமான பணியை செய்கிறோம். எங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். எங்களுக்கு நியாயமான ஊதியமும் இல்லை. பணியை நிரந்தரமாக்குவதுடன், எங்களின் ஆரோக்கியத்திலும் அரசு அக்கறை காட்ட வேண்டும். எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15ம் தேதி முதல், குப்பை அள்ளுவதை நிறுத்தி, பெங்களூரின் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நாங்கள் மூன்று நாட்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தினால், பெங்களூரு குப்பை மயமாகும் என்பதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த முறை நாங்கள் போராட்டம் நடத்தியபோது, எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் உறுதி அளித்தனர். ஆனால் நிறைவேற்றவில்லை. எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.