தங்கநகை வியாபாரி கடத்தல் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்
விஜயநகரா: தங்க நகை வியாபாரியை கடத்தி சென்ற மர்ம கும்பல், ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். விஜயநகரா மாவட்டம், ஹூவினஹடகலி கிராமத்தில் வசிப்பவர் மஞ்சுநாத் ஷேஜவாடகர், 58. தங்கநகைகள் வியாபாரம் செய்து வந்த இவர், சில ஆண்டுகளாக வியாபாரத்தை நிறுத்திவிட்டு, ஓய்வில் இருந்தார். நேற்று முன் தினம் காலையில் வழக்கம் போன்று, நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேட துவங்கினர். சில மணி நேரத்துக்கு பின், மஞ்சுநாத் ஷேஜவாடகரின் செல்போனில் இருந்து, அவரது அக்கா மஞ்சுளாவை தொடர்பு கொண்ட மர்மகும்பல், 'ஐந்து கோடி ரூபாய் கொடுத்தால் அவரை விடுவோம்' என, மிரட்டினர். மஞ்சுளா, 'எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறோம்' என கூறினார். ஆனால் கடத்தல்காரர்கள், 'பணம் கொடுத்தே ஆக வேண்டும்' என்றனர். உடனடியாக மஞ்சுளா, ஹிரேஹடகலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.