உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி ஆவணம் மூலம் அபகரித்த ரூ.40 கோடி அரசு நிலம் மீட்பு

போலி ஆவணம் மூலம் அபகரித்த ரூ.40 கோடி அரசு நிலம் மீட்பு

தொட்டபல்லாபூர்: போலி ஆவணத்தை உருவாக்கி அபகரித்த, 40 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் அரேஹள்ளி குட்டதஹள்ளி கிராமத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இதன் அருகில் உள்ள 6 ஏக்கர் அரசு நிலம், கால்நடை பராமரிப்பு மையம் கட்டுவதற்காக, 2021ல் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் அங்கு கால்நடை பராமரிப்பு மையம் கட்டப்படவில்லை. இந்நிலையில் அரேஹள்ளி குட்டதஹள்ளி கிராமத்தின் முத்தப்பா, புருஷோத்தம் கவுடா, ஹனுமந்தராயப்பா, முனிராஜ் ஆகியோர் போலி ஆவணங்களை உருவாக்கி, 6 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தனர். இதுகுறித்து பெங்களூரு ரூரல் மாவட்ட கலெக்டர் பசவராஜுக்கு தகவல் கிடைத்தது. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தொட்டபல்லாபூர் தாசில்தார் வித்யா ரத்தோடுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். தாசில்தார் விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையில், நான்கு பேரும் போலி ஆவணம் கொடுத்து நிலத்தை அபகரித்ததும்; வருவாய் துறை ஊழியர்கள் சிலர் இதற்கு உடந்தையாக இருந்ததும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அபகரிக்கப்பட்ட ஆறு ஏக்கர் அரசு நிலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. தற்போது அதன் மதிப்பு 40 கோடி ரூபாய். “நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்த, வருவாய் துறை ஊழியர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கலெக்டர் பசவராஜ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை