தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசு பள்ளி மாணவருக்கு தடை?
பெங்களூரு: 'அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்கள் தாமதமாக வழங்கப்படுகின்றன' என, பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். கர்நாடகாவில், 44,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில், பெரும்பாலான பள்ளிகளில் வகுப்பறைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளன. மேலும், ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால், பல பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வழக்கமாக ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் மாற்று சான்றிதழ்கள் வழங்கப்படும். ஏனெனில், அப்போது தான் அவர்களால் வேறு பள்ளிகளில் எளிதாக சேர முடியும். இந்நிலையில், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாற்று சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இது, நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், தனியார் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கி இரண்டு வாரத்திற்கும் மேலாகி விட்டன. ஆதலால் தனியார் பள்ளிகளில் தற்போது புதிதாக மாணவர்களை சேர்த்து கொள்வது கடினமான காரியமாகும். இது குறித்து, கர்நாடக மாநில பெற்றோர் சங்கத்தினர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்காக, மாற்று சான்றிதழ் தாமதமாக வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தில் பள்ளி கல்வித்துறை விரைந்து பதிலளிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.