| ADDED : டிச 01, 2025 06:30 AM
பெங்களூரு: கர்நாடக தேர்வு ஆணையம் நடத்தும், உதவி பேராசிரியர்களின் தகுதி தேர்வில், ஜி.பி.ஏ., மார்ஷல் தேர்ச்சி பெற்றுள்ளார். துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவின், ஹுலியூர்துர்காவை சேர்ந்த அரவிந்த். இவர் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய வின் திடக்கழிவு நிர்வகிப்பு பிரிவில் மார்ஷலாக பணியாற்றுகிறார். இத்துடன் முதுகலை பட்டப்படிப்பு படித்த இவர், நேரம் கிடைக்கும் போது, உதவி பேராசிரியர் பதவிக்காக படித்து வந்தார். சமீபத்தில் கர்நாடக தேர்வு ஆணையம் நடத்திய, உதவி பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வில், அரவிந்தும் பங்கேற்று தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார். அவருக்கு நேற்று முன் தினம், சான்றிதழும் வழங்கப்பட்டது. அரவிந்த் கூறியதாவது: குப்பை நிர்வகிப்பு பிரிவில் பணியாற்றும் எனக்கு, உதவி பேராசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதை நனவாக்க கர்நாடக தேர்வு ஆணையம் உதவியது. என்னை போன்றவர்களும் இத்தகைய முக்கியமான தேர்வில் தேர்ச்சி பெற, தேர்வு ஆணையமே காரணம். சான்றிதழ் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு தேர்வு ஆணையத்தின் எளிமையான விதிமுறைகளும் காரணமாக உள்ளன. இவ்வாறு கூறினார்.