கிரேட்டர் பெங்களூரு திருத்த மசோதா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றம்
பெங்களூரு : கிரேட்டர் பெங்களூரு திருத்த மசோதா - 2025 சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சரான, துணை முதல்வர் சிவகுமார், கிரேட்டர் பெங்களூரு திருத்த மசோதா - 2025 ஐ சட்டசபையில் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது: இதற்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, கிரேட்டர் பெங்களூரு மசோதாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகி உள்ளனர். கிரேட்டர் பெங்களூரு ஆணையம், ஐந்து மாநகராட்சிகளின் நிர்வாகத்தில் தலையிட கூடாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இதனால் மசோதாவில் திருத்தம் செய்து, மாநகராட்சி நிர்வாகத்தில், கிரேட்டர் பெங்களூரு ஆணையம் தலையிடாதபடி திருத்தம் செய்து உள்ளோம். பா.ஜ., -- சுரேஷ்குமார்: அரசோ, கிரேட்டர் பெங்களூரு ஆணையமோ, மாநகராட்சியில் தலையிடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் அசோக்: கிரேட்டர் பெங்களூரு என்பது ஆங்கில வார்த்தை. அரசால் நல்ல கன்னட வார்த்தையை கண்டுபிடிக்க முடியவில்லையா. சிவகுமார்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது காங்கிரஸ் தான். அந்த அமைப்புகளை பலவீனப்படுத்த எப்போதும் அனுமதிக்க மாட்டோம். இந்த மசோதா மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் திரும்ப பெறவும், விரிவான விவாதத்திற்கும் தயாராக உள்ளேன். ஐந்து மாநகராட்சி உருவாக்க வரைவு அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 2ம் தேதி இறுதி அறிக்கை வெளியாகும். யார் ஆட்சியில் இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்வது நமது கடமை. பெங்களூரின் அனைத்து கட்சி உறுப்பினர்களும், இந்த திருத்த மசோதா மீது பேசினர். முடிவில் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்வதாக அனைவரும் கூறியதால் ஒருமனதாக நிறைவேறியது.