சக்லேஸ்புராவின் ஹட்லு நீர்வீழ்ச்சி
பெங்களூரில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூர், மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். சக்லேஸ்பூரின் சுற்றுலா தலங்களில் ஹட்லு நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, புகழ் பெற்ற மலையேற்ற தலமாகும் உள்ளது. இயற்கை வனம், பாபி தோட்டங்கள் வழியாக, பசுமையை ரசித்தபடி மலையேற்றம் செய்வது உற்சாகமாக இருக்கும். இவைகளை கடந்து சென்றால், படிப்படியாக ஆறு நிலைகளில் கொட்டும் ஹட்லு நீர்வீழ்ச்சியை அடையலாம். குடும்பத்தினர், நண்பர்களுடன் இங்கு வருவோர், சிறந்த அனுபவத்தை பெறுவர். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் பல நீரோடைகளை காண்பீர்கள். ஒத்தையடி பாதையில் செல்லும் போது, மேற்கு தொடர்ச்சி மலையின் வசீகரத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்லும் வகையில், நீரோடை மீது நடைபாலமும் கட்டப்பட்டு உள்ளது. மலையேற்றம் செய்வோர், அதற்கான உடைகள், காலணிகள் அணிந்து, மாற்று துணிகள், உணவை எடுத்து சென்றுவிடுங்கள். காலை 7:00 மணிக்கு மேல் புறப்பட்டு, மாலை 5:30 மணிக்குள் திரும்பிவிட வேண்டும். அக்டோபர் முதல் மார்ச் மாதத்தில் இங்கு செல்வது ஏற்றதாகும். ஹட்லு நீர்வீழ்ச்சிக்கு, 15 வயதுக்கு உட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களும் மலையேற்றம் செய்வதை தவிர்க்கலாம். அடுத்த முறை சக்லேஸ்பூர் செல்ல திட்டமிடுவோர், தங்கள் 'டிரிப் பிளானில்', ஹட்லு நீர்வீழ்ச்சியையும் சேர்த்து கொள்ளுங்கள்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 140 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். ரயிலில் செல்வோர், சக்லேஸ்பூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், சக்லேஸ்பூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். - நமது நிருபர் -