மாநகராட்சி முறைகேடு வழக்கு மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில், 2005 மற்றும் 2011 - 12ல் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்ற உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பெங்களூரு மாநகராட்சியில் 2005; 2011 - 12ல் பல்வேறு பணிகள் செய்யப்பட்டதாக கூறி, போலி பில்கள் சமர்ப்பிக்கப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.இவ்வழக்கை விசாரித்த சி.ஐ.டி., போலீசார், அப்போதைய காலகட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரமேஷ், பொறியாளர்கள், கான்ட்ராக்டர்கள் மீது, 115 வழக்குகள் பதிவு செய்தனர். இது தொடர்பாக 77வது சிட்டி சிவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்டோர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லாததால், அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு நீதிபதி சந்தேஷ் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி சந்தேஷ் கூறியதாவது:இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி பணத்தை தவறாக பயன்படுத்தி, அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டோரை விடுவிக்க முடியாது. வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் சேகரித்த அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களையும் விசாரணை நீதிமன்றம் பரிசீலித்து மீண்டும் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.