| ADDED : டிச 04, 2025 05:47 AM
மாண்டியா: மாண்டியாவில் ஹனுமன் ஜெயந்தி பேரணியின் போது ஹிந்து ஆர்வலர்கள் மசூதிக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று சன்கிர்த்தன யாத்திரை எனும் பெயரில் பேரணி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கிலான ஹிந்து ஆர்வலர்கள் பங்கேற்றனர். இவர்கள் ஹனுமனுக்காக மாலை அணிவித்து பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணியை ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பினர் நடத்தினர். பேரணியில் பங்கேற்றோர் கையில் காவி கொடியுடன், தலையில் காவி ரிப்பனுடன் டிஜே., இசைக்கு நடமாடியபடி வந்தனர். ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டைக்கு அருகே உள்ள ஜாமியா மசூதிக்கு அருகே பேரணி வந்தது. அப்போது, அவர்கள் மசூதிக்கு எதிரே நின்றனர். மசூதியை நோக்கி கை காட்டி,'மசூதி ஹிந்துக்களுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் ஹனுமன் கோவில் இருந்தது. இதை 18ம் நூற்றாண்டில் ஹைதர் அலி இடித்துவிட்டு, மசூதி கட்டிவிட்டார். மசூதி ஹனுமன் கோவிலுக்கு சொந்தம்' என கோஷங்களை எழுப்பியவாறு, மசூதிக்குள் நுழைய முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்த, 100க்கும் மேற்பட்ட போலீசார் களத்தில் இறங்கினர். அவர்கள் ஹிந்து ஆர்வலர்களை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், அவர்கள் பஜனைகள், கோஷங்கள், நடனம் ஆடியவாறே மசூதிக்குள் நுழைய முயன்றனர். இதனால், போலீசாருக்கும், ஹிந்து ஆர்வலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதேபோன்ற சம்பவம் 2022ம் ஆண்டும் நடந்த பேரணியின் போதும் அரங்கேறியது. அப்போதும், ஜாமியா மசூதிக்குள் நுழைய ஹிந்து அமைப்பினர் முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த பகுதியை தென் மாநிலத்தில் உள்ள பாபர் மசூதி என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது குறித்து, எஸ்.பி., மல்லிகார்ஜுன் கூறுகையில், “மாவட்டம் முழுதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான பகுதியில் அதிக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நுாற்றுக்கணக்கிலான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன,” என்றார்.