சைபர் மோசடியில் தப்பியது எப்படி? வீடியோவில் சுதா மூர்த்தி விளக்கம்
பெங்களூரு: தனக்கு நடந்த சைபர் மோசடி முயற்சி குறித்தும், சைபர் திருடர்களிடமிருந்து தப்பியது குறித்தும் ராஜ்யசபா எம்.பி., சுதாமூர்த்தி வீடியோ வாயிலாக விளக்கியுள்ளார். 'இன்போசிஸ்' அறக்கட்டளை நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதா மூர்த்தியிடம், உங்கள் மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என கூறி, சைபர் திருடர்கள் கடந்த 5ம் தேதி மோசடி செய்ய முற்பட்டனர். இதை சுதா மூர்த்தி கண்டுபிடித்ததால் சைபர் மோசடியிலிருந்து தப்பினார். இது குறித்து அவரது உதவியாளர் கணபதி போப்பையா என்பவர், கடந்த 20ம் தேதி, பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து, சுதாமூர்த்தி வெளியிட்டுள்ள வீடியோவை, பெங்களூரு சிட்டி போலீசார் தங்கள் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது: செப்டம்பர் 5ம் தேதி, ஓணம் பண்டிகையன்று, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்நபர் தன்னை இந்திய தொலைத்தொடர்புத் துறையின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த துறையிலிருந்து ஏற்கனவே எனக்கு அழைப்பு வந்திருந்தது. எனவே, அவர்கள் தான் மீண்டும் அழைக்கின்றனர் என எடுத்து பேசினேன். அந்நபர், எனது மொபைல் எண்ணிலிருந்து ஆபாச வீடியோக்கள் அனுப்பப்படுகிறது என்றார். மேலும், மொபைல் எண்ணை ஆதாரில் இணைத்து உள்ளீர்களா என்று கேட்டு தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சித்தார். சுதாரித்து கொண்ட நான், சைபர் திருடர்களாக இருக்கலாம் என நினைத்து, உடனடியாக அழைப்பை கட் செய்துவிட்டு, சைபர் போலீசாரிடம் புகார் செய்தேன். சைபர் மோசடி கும்பல், அப்பாவி மக்களிடம் மொபைலில் தொடர்பு கொண்டு, அதிகாரிகள் போல நடித்து ஏமாற்றுவதில் மும்முரமாக உள்ளனர். எனவே, அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால், அவர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு, ஓ.டி.பி., எண் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம். டிஜிட்டல் கைது என கூறுவதையும் நம்ப வேண்டாம். இதுபோன்று, யாராவது உங்களிடம் செய்தால் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, சைபர் போலீசில் புகார் செய்யுங்கள். அனைவரும் தங்கள் வங்கி கணக்குகளில் உள்ள சேமிப்பு பணத்தை பத்திரமாக வைத்து கொள்ளவும்; எச்சரிக்கையுடன் இருக்கவும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.