கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது
கலபுரகி: கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை அடித்துக் கொன்று, விவசாய நிலத்தில் புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர். கலபுரகி மாவட்டம், ஆலந்தின் கோரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லால்சாப் அப்துல் கவுண்டி, 40; விவசாயி. இவரது மனைவி மாசக், 38. விவசாய கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கிய லால்சாப், பூசனுார் கிராமத்தில், 22 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தார். இவருடன், மனைவி மற்றும் குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். அக்., 31ம் தேதி விவசாய நிலத்தில் கணவன் - மனைவி மட்டும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போ து, கணவரின் கள்ளத்தொடர்பு குறித்தும், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் குறித்தும் கணவரிடம் மாசக் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த லால்சாப், மாசக்கை சரமாரியாக அடித்து, காலால் மிதித்துள்ளார். இதில் மாசக் அங்கேயே உயிரிழந்தார் . அதிர்ச்சி அடைந்த லால்சாப், மனைவி சடலத்தை குழிதோண்டி விவசாய நிலத்திலேயே புதைத்து விட்டார். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தன் மனைவியை காணவில்லை என்று பலருக்கு, 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்பி உள்ளார். இதை பார்த்த மனைவியின் உறவினர்கள், நிம்பர்கா போலீசில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியை கொன்று, விவசாய நிலத்தில் லால்சாப் புதைத்தது தெரியவந்தது. புதைத்த இடத்தை போலீசாருக்கு நேற்று முன்தினம் லால்சாப் அடையாளம் காட்டினார். மாசக் உடலை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லால்சாப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.