பணத்துக்காக மனைவி டார்ச்சர் கணவர் தற்கொலை முயற்சி
துமகூரு : 'பணத்துக்காக மனைவி தொல்லை கொடுக்கிறார்' என, வீடியோவில் குற்றஞ்சாட்டிய கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். துமகூரு நகரின் ஜெயநகரில் வசிப்பவர் சல்மான் பாஷா, 30. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், நிகத் பர்தோஸ், 26, என் பவருடன் திருமணம் நடந்தது. இருவரும் இரண்டு ஆண்டுகள் அன்யோன்யமாக குடும்பம் நடத்தினர். நிகத் பர்தோஸ் இரண்டாவது முறை கருவுற்றபோது, சல்மான் பாஷா, பணி நிமித்தமாக குவைத் சென்றார். இதனால் நிகத் பர்தோஸ், தன் தாய் வீட்டுக்கு சென்றார். அதன்பின் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது. குவைத்தில் வேலையை விட்டு, சல்மான் பாஷா, துமகூருக்கு திரும்பினார். ஆனால் பர்தோஸ் நடவடிக்கை மாறியிருந்தது. இரண்டு குழந்தைகளையும் பார்க்க சல்மானை அனுமதிக்கவில்லை. இதனால் மனம் நொந்த சல்மான் பாஷா, வீடியோ வெளியிட்டார். 'என் மனைவி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் மாவட்ட தலைவர் சையத் புர்ஹான் உத்தீனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து கொண்டு, என்னிடம் பணம் கேட்டு துன்புத்துகிறார்' என குற்றஞ்சாட்டினார். அதன்பின் சல்மான், பேஸ்புக்கில் 'லைவ் வீடியோ' செய்து, விஷம் குடித்தார். தற்போது துமகூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது குற்றச்சாட்டை பர்தோஸ் மறுத்துள்ளார். 'என் கணவரின் குற்றச்சாட்டு பொய்யானது. சோப்பு நீரை குடித்து, விஷம் குடித்ததாக நாடகமாடுகிறார். ஆசிட் வீசுவதாக என்னை மிரட்டினார். இதுகுறித்து, நான் போலீசில் புகார் அளித்துள்ளேன். நான் வேலை செய்யும் இடத்துக்கு வந்து, தொல்லை கொடுத்தார். நான் அவருக்கு எந்த விதத்திலும், தொந்தரவு கொடுக்கவில்லை' என விவரித்துள்ளார்.