உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காலில் விழுந்ததால் உயிருடன் விட்டேன் நடிகையை கொல்ல முயன்ற கணவர் பகீர்

காலில் விழுந்ததால் உயிருடன் விட்டேன் நடிகையை கொல்ல முயன்ற கணவர் பகீர்

ஹனுமந்தநகர் : ''இனி உங்கள் பேச்சை கேட்பேன் என்று காலில் விழுந்து கதறியதால் உயிருடன் விட்டேன்,'' என்று, சின்னத்திரை நடிகை ஸ்ருதியை கொல்ல முயன்ற வழக்கில், கைதான கணவர் பகீர் தகவல் கூறி உள்ளார்.கன்னட சின்னத்திரை நடிகை மஞ்சுளா என்ற ஸ்ருதி, 45. அம்ருததாரே உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து உள்ளார். கடந்த 4ம் தேதி ஸ்ருதிக்கும், அவரது கணவர் அமரேஷ், 49 க்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.ஸ்ருதி கண்ணில் மிளகாய் பொடியை துாவி அவரது விலா எலும்பு, தொடை, கழுத்தில் கணவர் கத்தியால் குத்தினார். உயிருக்கு போராடியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து ஸ்ருதியின் சகோதரர் கடந்த 9ம் தேதி ஹனுமந்தநகர் போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக இருந்த அமரேஷ் கைது செய்யப்பட்டார். மனைவியை கொல்ல முயன்றதற்கான காரணம் குறித்து போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்:நாங்கள், 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். இரண்டு மகள்கள் உள்ளனர். கல்லுாரிக்கு செல்கின்றனர். ஸ்ரீநகரில் 27 லட்சம் ரூபாய் குத்தகை கொடுத்து வீட்டில் குடியேறினோம். சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பின், ஸ்ருதி சரியாக வீட்டிற்கு வரவில்லை. மகள்கள் என்ன செய்கின்றனர் என்று கூட கவனிக்கவில்லை. வீட்டு பொறுப்புகளை நானே கவனித்து வந்தேன். படப்பிடிப்பு என்ற சாக்கில் இரவு நேரத்தில், 'பப்' சென்று, சிலருடன் சேர்ந்து ஆட்டம் போட்டார்.பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவுக்கு, என்னிடம் சொல்லாமல் சென்றார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவரது சகோதரர் வீட்டில் வசித்தார். உன்னுடன் வாழ முடியாது. என்ன வேண்டும் என்றாலும் செய்து கொள் என்று கூறினார். குத்தகை பணம் 27 லட்சம் ரூபாயை, வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வாங்கி கொண்டு, எங்களை விட்டு பிரிந்து செல்வது ஸ்ருதியின் நோக்கமாக இருந்தது.அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆனால், என்னிடம் தினமும் தகராறு செய்தார். கோபத்தில் அவரை தீர்த்துக்கட்ட நினைத்தேன். அவரது கண்ணில் மிளகாய் பொடி துாவி சரமாரியாக குத்த ஆரம்பித்தேன். அப்போது என் காலில் விழுந்து, இனி உங்கள் பேச்சை கேட்பேன். உயிருடன் விட்டுவிடுங்கள் என்று கதறினார். இதனால் கொல்லாமல் விட்டு விட்டேன்.இவ்வாறு அவர் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி