வரி எல்லைக்குள் வராத சொத்துக்கள் அடையாளம் கண்டு வருமானம் அதிகரிப்பு
2025 - 26ம் ஆண்டில், 5,716 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மிக அதிகமான சொத்து வரி வசூலிக்கும் மாநகராட்சி என்ற பெருமை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் வரி விதிக்காமல், வரி எல்லைக்குள் வராத சொத்துகளை அடையாளம் கண்டு, வரி எல்லைக்குள் சேர்த்து வரி வசூலித்து இலக்கை எட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பாக்கியுள்ள சொத்து வரியை மொத்தமாக செலுத்தினால், அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்யும் நோக்கில், ஓ.டி.எஸ்., எனும் ஒரே நேரத்தில் வரி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி பொது மக்கள் வரி செலுத்தி, அதிக வரி வசூலுக்கு காரணமாகினர். 2024ன் பிப்ரவரி 22ம் தேதி முதல் நவம்பர் 30 வரை மூன்று லட்சம் சொத்துதாரர்கள் 1,277 கோடி ரூபாய் வரி செலுத்தி உள்ளனர். பெங்களூரு மாநகராட்சி, 25 லட்சம் சொத்துகளின் காகித வடிவில் இருந்த பட்டாக்களை, ஆன்லைனில் டிஜிட்டல் மயமாக்கி, இ - பட்டா நடைமுறையை செயல்படுத்தியது. இது இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் இ - பட்டா நடைமுறையாகும். இந்த பட்டாக்களை எந்த நேரத்திலும், எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக பெறலாம். கர்நாடக அரசின் வருவாய்த்துறையிடம், ட்ரோன் படங்கள் மற்றும் டிஜிட்டல் மயமான சொத்து வரைபடங்களை பெற்று, மாநகராட்சியின் இ - பட்டாக்களுடன் இணைக்கப்படுகிறது. அனைத்து சொத்துகளுக்கு ஜி.பி.எஸ்., அடிப்படையிலான ஐ.டி., அளிக்கப்படுகிறது. உள்ளங்கையில் சொத்து ஆவணங்கள் கிடைப்பதால், மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். இ - பட்டாவில் ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இது பட்டா பரிமாற்றத்துக்கு உதவுகிறது. பொது மக்கள் பட்டா மாற்றிக்கொள்ள மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைய வேண்டி இருக்காது. 'பிளாக் செயின்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பட்டாக்கள் பாதுகாக்கப்படும். இ - பட்டா நடைமுறையால், ஓராண்டில் 1,000 கோடி ரூபாய் கூடுதலாக சொத்து வரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் துறையின் திஷாங்க் அப்ளிகேஷன் போன்று, பொது மக்களுக்கு புவியியல் தகவல் அடிப்படையிலான சொத்து நடைமுறையை மேம்படுத்த, மாநகராட்சி ஆலோசிக்கிறது. இதனால் ரியல் எஸ்டேட் விவகாரங்களில் ஏமாற்றப்படுவதை தவிர்க்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம், சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்தப்படும். பெங்களூரு குடிநீர் வாரியம், மின் விநியோக நிறுவனம், வர்த்தக உரிமம், இ - சொத்து உட்பட, மற்ற துறைகளிடம் தகவல் பெற்று, சொத்து வரி பாக்கி வைத்துள்ளோரை அடையாளம் கண்டு வரி வசூலிக்கப்படும். இதனால் ஆண்டுதோறும் கூடுதலாக 1,000 கோடி ரூபாய் வரி வசூலாகும்.