சித்தராமையா தொடர்ந்தால் ... பா.ஜ., - எம்.எல்.சி., ரவி எச்சரிக்கை
பெங்களூரு: ''சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால், மாநிலத்திற்கு நல்லது இல்லை,'' என்று, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கணித்து உள்ளார். பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அங்கு நடக்கும் திரிணமுல் காங்கிரசின் காட்டாட்சிக்கு முடிவு கட்டப்படும். பா.ஜ., பிரசாரம் சிறப்பாக உள்ளது. அங்கு முடிந்த முதல்கட்ட தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்து உள்ளது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில், பயங்கரவாதி ஷாரிக்கிற்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்து இருப்பது, அவரை சகோதரர் என்று கூறிய காங்கிரஸ் தலைவர்களுக்கு வலியை கொடுத்து இருக்கும் என்று நினைக்கிறேன். இந்திரா, ராஜிவை இழந்தும் காங்கிரஸ் தலைவர்கள் திருந்தவில்லை. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் காங்கிரசின் நிலைப்பாடு சரியில்லை. பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்குகிறது. சி.இ.டி., தேர்வு எழுத சென்ற மாணவர்களின் பூணுாலை அகற்றியது சரியல்ல. கிருபாநிதி கல்லுாரி ஊழியர்கள் வேண்டுமென்றே, மாணவர்கள் பூணுாலை அகற்றியதாக கலெக்டரே ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த விஷயத்தில் அரசு ஏன் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்று தெரியவில்லை. துணை முதல்வர் சிவகுமார், முதல்வராவாரா என்று எனக்கு தெரியாது. அவரது தலைவிதி என்ன என்றும் தெரியவில்லை. சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால், மாநிலத்திற்கு நல்லது இல்லை. காங்கிரசில் யார் முதல்வரானாலும், மாநிலத்திற்கு அது நல்ல விஷயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.