உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஏ, பி பிரிவு கோவில்களின் வருமானம் சி பிரிவு மேம்பாட்டுக்கு மாற்றம்

 ஏ, பி பிரிவு கோவில்களின் வருமானம் சி பிரிவு மேம்பாட்டுக்கு மாற்றம்

பெங்களூரு: ''அறநிலைய துறைக்கு உட்பட்ட 'ஏ, பி' பிரிவு கோவில்களின் வருமானத்தில், 'சி' பிரிவு கோவில்கள் மேம்படுத்தப்படும்,'' என சட்டசபையில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: காங்கிரஸ் - ரமேஷ் பண்டிசித்தே கவுடா: ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் வருமானம், தனியார் கோவில் வளர்ச்சிக்கு வழங்கப்படுகிறதா? அமைச்சர் ராமலிங்க ரெட்டி: விதிமுறைப்படி, அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களின் வருமானம், தனியார் கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த கூடாது. இந்த தொகை துறைக்கு உட்பட்ட 'சி' பிரிவு கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மாண்டியா மாவட்டம், ஸ்ரீ ரங்கபட்டணா சட்டசபை தொகுதியில், ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட 199 கோவில்கள் உள்ளன. இவற்றில், 'ஏ' பிரிவில் 3 கோவில்களும்; 'பி' பிரிவில் 2 கோவில்களும்; 'சி'பிரிவில் மற்ற கோவில்களும் உள்ளன. இதில் 'சி' பிரிவு கோவில்களுக்கு ஆண்டு கவுரவ தொகையாக, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவே இப்பிரிவு கோவில்களுக்கு வருமானமாக உள்ளது. ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள நிமிஷாம்பா கோவில் 'ஏ' பிரிவில் வருகிறது. இக் கோவிலில், 2024 - 25ல் 8.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ரங்கநாத சுவாமி கோவிலில் 5.15 கோடி ரூபாயும்; அஹல்யாதேவி கோவிலில் 1.98 கோடி ரூபாயும்; 'பி' பிரிவில் வரும் வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு 17.25 லட்சம் ரூபாயும்; காசி விஸ்வநாதேஸ்வரா கோவிலுக்கு 10.10 லட்சம் ரூபாயும் வருவாய் கிடைத்து உள்ளது. இவை நன்கொடை, காணிக்கை, சேவை உட்பட பல வழிகளில் பக்தர்களால் வழங்கப்பட்டவை. இந்த தொகை கோவில் பராமரிப்பு, தினமும் பூஜைகள், தேர்த்திருவிழா, சீரமைப்பு, உள் கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ