உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காளி ஆஞ்சநேயர் கோவிலை கையகப்படுத்த இடைக்கால தடை

காளி ஆஞ்சநேயர் கோவிலை கையகப்படுத்த இடைக்கால தடை

பெங்களூரு : பெங்களூரு காளி ஆஞ்சநேயர் கோவிலை, ஹிந்து அறநிலைய துறை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள காளி ஆஞ்சநேயர் கோவிலில், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 25 ஆண்டுகளாக, கோவில் நிர்வாகத்தினர், கோவில் வருவாய், செலவு குறித்து சரியாக பராமரிக்கவில்லை' என்று ஹிந்து அறநிலைய துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கோவிலை ஹிந்து அறநிலையத் துறை, தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்வதாக, கோவில் நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.இந்த நோட்டீசை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதி சுனில் தத்தா யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:கோவில் நிர்வாகத்தை தங்கள் வசம் எடுத்துக் கொள்ள, அவசர அவசரமாக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, கோவில் நிர்வாகத்தினரின் கருத்தை கேட்கவில்லை.அத்துடன் இந்த உத்தரவு, விடுமுறை நாளான மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் மீது அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. கோவில் நிர்வாகத்தில் 11 பேர் கொண்ட டிரஸ்டிகள் உள்ளனர். ஒருவர் செய்த தவறை, அனைவர் மீதும் சுமத்துவது சரியல்ல.எனவே, இவ்வழக்கு விசாரணை முடியும் வரை, அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

எதிர்ப்பு

இதற்கு அரசு தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:கோவில் டிரஸ்டிகள் பணத்தை முறைகேடு செய்வதாக புகார்கள் வந்துள்ளன. அத்துடன், கோவில் உண்டியல் பணத்தை, கோவில் ஊழியர்கள் திருடும் வீடியோ, ஊடகங்களில் வெளியாகி உள்ளது.கோவில் நிர்வாகம் மீதான குற்றச்சாட்டு குறித்து உயர் அதிகாரி தலைமையில் அங்கு ஆய்வு செய்யப்பட்டது. நிதி மோசடி நடந்திருப்பது தெரிந்தது. இதன் காரணமாகவே, கோவிலை ஹிந்து அறநிலைய துறை தன் வசம் எடுத்து கொண்டது. எனவே, அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, 'கோவிலை கையகப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்றார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை