உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெயருக்கு மட்டுமே தேசிய தலைவரா? காங்கிரஸ் தொண்டர்கள் சந்தேகம்

 பெயருக்கு மட்டுமே தேசிய தலைவரா? காங்கிரஸ் தொண்டர்கள் சந்தேகம்

பெங்களூரு: முதல்வர் பதவி தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் அரசில் எழுந்துள்ள குழப்பத்தை சரி செய்ய முடியாமல், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பரிதவிக்கிறார். தேசிய தலைவராக இருந்தும் சுதந்திரமாக முடிவெடுக்க முடியவில்லை என, அவர் விரக்தியில் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக, கர்நாடக காங்கிரஸ் அரசில், முதல்வர் பதவி தொடர்பாக, ஏற்பட்டுள்ள குழப்பங்கள், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், காங்., மேலிடம் காலம் கடத்துகிறது. இதற்கு முன், முதல்வர் மாற்றம் குறித்து, மேலிடம் முடிவு செய்யும். இது பற்றி நீங்கள் வாயை திறக்காதீர்கள் என, அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டிருந்தார். சில நாட்களுக்கு மட்டுமே, இவரது உத்தரவுக்கு அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் கீழ்ப்படிந்தனர். அதன்பின் பழையபடி கருத்து தெரிவிக்க துவங்கினர். இது கார்கேவுக்கு எரிச்சலை அளித்துள்ளது. முதல்வர் மாற்றம் விஷயத்தில், ராகுல் மற்றும் கார்கே இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. முதல்வர் பதவியில் சித்தராமையா நீடிக்க வேண்டும் என, ராகுல் விரும்புகிறார். ஆனால் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவி விஷயத்தில், கார்கேவை சிவகுமார் அதிகம் நம்பியுள்ளார். ஆனால் கர்நாடகாவை சேர்ந்தவராக, தேசிய தலைவராக இருந்தும் கார்கேவால், சுதந்திரமாக முடிவு எடுக்க முடியவில்லை. தன் இயலாமையை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். நேற்று முன் தினம், 'மாநிலத்தில் நடக்கும் குழப்பத்துக்கு, மாநில தலைவர்களே காரணம். குழப்பத்தை உருவாக்கியவர்களே, அதற்கு தீர்வு கண்டு கொள்ள வேண்டும். அனைத்துக்கும் மேலிடத்தை எதிர்பார்க்க கூடாது' என, அறிவுறுத்தியுள்ளார். இது போன்று கார்கே தன் இயலாமையை தெரிவிப்பதை பார்த்தால், இவர் பெயருக்கு மட்டுமே, தேசிய தலைவராக இருக்கிறாரா. இவரது கருத்துகளுக்கு, மேலிடம் முக்கியத்துவம் அளிப்பதில்லையா என, தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ