உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு இடங்களில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு... கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு காங்., அரசு செக்

அரசு இடங்களில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு... கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு காங்., அரசு செக்

நாட்டில் தேசபக்தியை வளர்க்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சேவைகள் பிடிக்காத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள், அமைப்பை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனும், கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பிரியங்க் கார்கே, 'கர்நாடகாவின் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்' என, நான்கு நாட்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். இதனால் அவர் கடும் விமர்சனங்களை சந்தித்தார். கையில் குச்சி ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத அவரோ, 'ஊர்வலம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கையில் குச்சியை எடுத்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது; அம்பேத்கர் ஜெயந்தி அன்று தலித் சமூகத்தினர் கையில் குச்சியை எடுத்துச் செல்ல அனுமதி உள்ளதா?' என்றும் கேள்வி எழுப்பினார். தன் கடிதத்தில், தமிழகத்தில் அரசு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது பற்றியும் பிரியங்க் கார்கே குறிப்பிட்டு இருந்தார். இதனால், தமிழகத்தைப் போல கர்நாடகாவிலும் தடையை அமல்படுத்தலாமா என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தலைமை செயலர் ஷாலினிக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார். தந்திரமாக... இந்நிலையில் பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி தடை விதிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு தடை என்று கூறினால், எதிர்க்கட்சியினர், ஹிந்து அமைப்பினரின் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால், தந்திரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதுகுறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: அரசு, பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி பெறுவது அவசியம் என்று முன்கூட்டியே சட்டம் உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் இதை கடைப்பிடிப்பது இல்லை. தனியார் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அரசு, பொது இடங்களில் நடத்தும் தனியார் நிகழ்ச்சிகளை நாங்கள் கட்டுப்படுத்தலாம். இனி, அரசு இடங்களில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. அப்படியே நடத்த நினைத்தாலும், போலீசிடம் முன் அனுமதி பெறுவது அவசியம். தனியார் நிகழ்ச்சிகள் தொடர்பாக இதற்கு முன்பு உள்துறை, சட்ட துறை, கல்வி துறை பிறப்பித்த முந்தைய உத்தரவுகளை தொகுத்து, புதிய விதிகள் வகுக்கப்படும். அடுத்த மூன்று நாட்களில் புதிய விதி அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். பலி பசு அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பேட்டியில், ''அரசு இடங்களில், தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெறுவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம். இதுதொடர்பாக புதிய விதி அமல்படுத்தப்படும். அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளோம். அனைவருக்கும் சட்டம் ஒன்று தான். அனுமதி பெற்று நிகழ்ச்சி நடத்தினால் என்ன பிரச்னை? தடியை எடுத்துக் கொண்டு செல்ல, யாருக்கும் அனுமதி இல்லை,'' என்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு 'செக்' வைக்கும், காங்கிரஸ் அரசின் முடிவுக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், ''ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்று, முடிவு எடுத்தது சித்தராமையா. ஆனால் பிரியங்க் கார்கேயை 'பலி பசு' ஆக்கிவிட்டார்,'' என்றார். மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா கூறுகையில், ''ஜனநாயகத்தை தற்கொலை செய்ய வைக்கும் நோக்கில் செயல்படுவது, காங்கிரசுக்கு வழக்கமாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளை தடுக்கவே, தனியார் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தடை விதித்துள்ளனர். அரசுக்கு எதிராக எந்த நேரத்திலும் போராட்டம் துவங்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி