கெம்பே கவுடா விருது சந்தேகம் சாதனையாளர்கள் வருத்தம்
பெங்களூரு:ஐந்து ஆண்டுகளுக்கு பின், பெங்களூரு மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி ஆடம்பரமாக கொண்டாடப்படவுள்ளது. ஆனால் 'கெம்கே கவுடா' விருது வழங்குவது சந்தேகம் என, தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சாதனையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பெங்களூரு மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி காலம், 2020 செப்டம்பர் 10ம் தேதியன்று முடிவடைந்தது. அதன்பின் இதுவரை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், நிர்வாக அதிகாரி, தலைமை கமிஷனர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் நடக்கிறது.கடந்த 2020ல், மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு 'கெம்கேகவுடா' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவியதால், கெம்பேகவுடா ஜெயந்தி மற்றும் விருது வழங்குவது நிறுத்தப்பட்டது.அதற்கடுத்த ஆண்டுகளில் ஜூன் 27ம் தேதி, கெம்பேகவுடா பிறந்த நாளன்று, பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகம் முன்பாக உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணங்கியதை தவிர, வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, கெம்பேகவுடா ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படும். விருதும் வழங்குவதாக அறிவித்தது. 2023 - 24ல் அமைச்சர் ராமலிங்க தலைமையில், விருது தேர்வு கமிட்டி அமைத்தது. அப்போது விருதுக்காக 800 முதல் 900 சாதனையாளர்கள், விருது கோரி விண்ணப்பித்தனர். இதில் தகுதியான 120 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எளிமையாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், விருது வழங்கவில்லை.ஐந்து ஆண்டுகளுக்கு பின், இம்முறை பெங்களூரின் டவுன் ஹாலில், ஆடம்பரமாக கெம்பேகவுடா நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி தயாராகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை செய்யும்படி, தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு 11 நாட்கள் மட்டுமே உள்ளதால், இம்முறையும் கெம்பேகவுடா விருது வழங்குவது சந்தேகம் என, தகவல் வெளியாகிஉள்ளது.