உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராம்சாகர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோலார் உதவி கலெக்டர் உத்தரவு

 ராம்சாகர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோலார் உதவி கலெக்டர் உத்தரவு

தங்கவயல்: தங்கவயலில் ராம்சாகர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, கோலார் மாவட்ட உதவி கலெக்டர் எச்.பி.எஸ். மைத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராம்சாகர் ஏரி பகுதியை பேத்தமங்களா தொகுதி முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ., துரைசாமி நாயுடுவின் குடும்பத்தினர் உட்பட சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்க மகளிர் பிரிவு தலைவர் நளினி கவுடா புகார் செய்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ராம்சாகர் ஏரியின், 100 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. அதில், 13 ஏக்கர் நிலத்தை, பேத்தமங்களா தொகுதி முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ., துரைசாமி நாயுடு குடும்பத்தினர், தங்களுக்கு சொந்தமாக்கியுள்ளனர். தொகுதி மறுசீரமைப்புக்கு முன், பேத்தமங்களா பொது தொகுதியாக இருந்தது. 1972ல் துரைசாமி நாயுடு சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தற்போது, பேத்தமங்களா தனி தொகுதியாகி விட்டது. துரைசாமி நாயுடு குடும்பத்தினரோ, 'நாங்கள் ஏரி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. உணவு பொருட்கள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், முன்னாள் எம்.எல்.ஏ.,வான துரைசாமி நாயுடுவுக்கு 1949 மற்றும், 1963ம் ஆண்டுகளில், அரசு, 13 ஏக்கர் நிலம் வழங்கியது; எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டது' என்றனர். உதவிக் கலெக்டர் மைத்ரி நடத்திய விசாரணையில், சர்வே எண், 52 ல் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமி நாயுடு குடும்பத்தை சேர்ந்த விஜயலட்சுமி, முனிரத்தினம் நாயுடு, கே. நளினி ராமா, டி.கிரண்குமார், எம். சாந்தா ஆகியோரின் பெயர்களில் உள்ள நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் என்பது உறுதியானது. எனவே, நாயுடு குடும்பத்திற்கான சொந்தமான நில ம் என்பதற்கான ஆவணங்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், ராம்சாகர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ