3 மாதங்களாக கோமாவில் இருக்கும் குழந்தை தனியார் மருத்துவமனைக்கு குமாரசாமி எச்சரிக்கை
ஜெயநகர்: ‘‘மருத்துவர்கள் அலட்சியத்தால் கோமாவுக்கு சென்ற ஒன்றரை வயது குழந்தையின் உடல்நிலை குறித்து, இன்று மாலைக்குள் தகவல் தெரிவிக்காவிட்டால், தனியார் மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மத்திய அமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரு நாகரபாவியில் உள்ள, ‘கிளவுடு நைன்’ என்ற தனியார் மருத்துவமனையில், மாண்டியாவை சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை ஷாயன், காது அறுவை சிகிச்சைக்காக, 3 மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதால், குழந்தை ‘கோமா’ நிலைமைக்கு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெங்களூரு ஜெயநகரில் உள்ள கிளவுடு நைன் மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை சிகிச்சை பெறுகிறது. இருப்பினும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையறிந்த, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, தனியார் மருத்துவமனைக்கு, நேற்று சென்று குழந்தையை பார்வையிட்டார். குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின், அவர் கூறியதாவது: மூன்று மாதங்களாக கோமாவில் இருக்கும் குழந்தையின் நிலைமை மிகுந்த வேதனை அளிக்கிறது. மயக்க மருந்து கொடுப்பதில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை மருத்துவமனை நிர்வாகம் மறைக்க பார்க்கிறது. இதற்கு மருத்துவமனை நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும். குழந்தையின் உடல்நிலை குறித்து, மருத்துவர்கள் பலவிதமான அறிக்கை அளிக்கின்றனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் கோமாவுக்கு சென்ற ஒன்றரை வயது குழந்தையின் உடல்நிலை குறித்து இன்று தகவல் தெரிவிக்காவிட்டால், தனியார் மருத்துவமனை மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், மருத்துவமனை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.