உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மறைந்த நடிகை சரோஜா தேவி அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த நடிகை சரோஜா தேவி அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பெங்களூரு தெற்கு : 'கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவியின் உடல், பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.தென்னிந்திய திரையுலகில் கோலோச்சிய நடிகை சரோஜா தேவி, 87. பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் காலமானார். அவரின் இறப்புக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்ததுடன், சிலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் அஞ்சலி

முதல்வர் சித்தராமையா உட்பட தலைவர்கள் நேற்று காலை அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது ரசிகர்கள் வருகை தந்து, அஞ்சலி செலுத்தினர்.பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஏற்றப்பட்டது. பெங்களூரில் இருந்து புறப்பட்ட வாகனம், பெங்களூரு தெற்கு மாவட்டம் சென்னபட்டணாவில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷ்வாரா கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு சரோஜாதேவிக்கு விருப்பமான தோட்டத்தில், பாரம்பரிய முறைப்படி, அவரது தாயாரின் சமாதி அருகில் இறுதிச்சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்தது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின், சரோஜா தேவி மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. துணை முதல்வர் சிவகுமார், எம்.எல்.ஏ., யோகேஸ்வர் உட்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பங்கேற்றனர்.

சிவகுமார்

பின், துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:தென்னிந்திய திரைப்பட உலகில் கோலோச்சினார். நான் முதன் முறையாக அமைச்சரானபோது, எனக்கு போன் செய்து, என்னை திரைப்படங்களில் நடிக்குமாறு சொன்னார்.மனித பிறப்பு தற்செயலானது; மரணம் தவிர்க்க முடியாதது. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நாம் என்ன சாதித்தாலும் அது நிலைத்து நிற்கும். இளம் வயதில் 'பத்ம விபூஷண்' விருதை பெற்றார்.சாலை ஒன்றுக்கு அவர் பெயர் வைப்பது குறித்து வரும் நாட்களில் பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், மாநகராட்சியில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.எந்த சர்ச்சையிலும் சிக்காமல், அனைத்து தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகினார். அவருக்கு சிலை வைப்பது முக்கியமில்லை. அவர் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விவாதித்து முடிவு செய்வோம். அவரது பெயர் நிலைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை