பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4,056 அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் இல்லை. இதனால், தங்களின் பிள்ளைகளை பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதற்காக ஏழை, நடுத்தர குடும்பத்தினர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவக்க அரசு கல்வித்துறை முடிவு செய்தது. கடந்த 2018 - 19ம் ஆண்டு முதல் 2024 - 25 வரை 2,618 அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட்டன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் 4,056 அரசு பள்ளிகளில் துவக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை வகுப்புகள் நடத்த வேண்டும். எல்.கே.ஜி.,யில் 4 முதல் 5 வயது வரையிலான சிறார்களை சேர்க்க வேண்டும். இதற்காக தனி வகுப்பறை தயார் செய்ய வேண்டும். ஒரு வகுப்பில் 40 சிறார்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். இந்த வகுப்புகள் துவக்குவது குறித்து, மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் பி.யு.சி.,யில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். முறைப்படி அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எட்., பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.