உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முடா விசாரணையை முடிக்க லோக் ஆயுக்தாவுக்கு 2 மாதங்கள் கெடு

முடா விசாரணையை முடிக்க லோக் ஆயுக்தாவுக்கு 2 மாதங்கள் கெடு

பெங்களூரு: 'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது, லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த 'பி' அறிக்கைக்கு எதிரான மனு மீது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பு கூறவில்லை. 'முடா' முறைகேடு பற்றிய விசாரணையை, இரண்டு மாதங்களுக்குள் முடிக்க, லோக் ஆயுக்தாவுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகளை முதல்வர் சித்தராமையா வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, மைசூரின் சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் புகார் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட 4 பேர் மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், 'முதல்வர் உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள்' என, நீதிமன்றத்தில் 'பி' அறிக்கையை, லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்தனர். 'இந்த அறிக்கையை ஏற்க கூடாது' என்றும், 'வழக்கின் விசாரணை அதிகாரியான, மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., உதேஷை மாற்ற வேண்டும்' எனவும், தனித்தனி புகார்களை, சிநேகமயி கிருஷ்ணா பதிவு செய்தார். இரண்டு மனுக்கள் மீதும் விசாரணை நடத்திய நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், கடந்த மாதம் 30ம் தேதி விசாரணையை முடித்தார். 'இம்மாதம் 9ம் தேதி தீர்ப்பு' என்று அறிவித்திருந்தார். 'பி' அறிக்கையின் மீது நீதிபதி என்ன தீர்ப்பு கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. விசாரணை அதிகாரியை மாற்ற கோரிய மனுவை முதலில் தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார். 'முடா'வில் 50:50க்கு திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்கும் லோக் ஆயுக்தா, இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதி, அதன்பின், 'பி' அறிக்கை தொடர்பான மனு மீது தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை