மல்லபிரபா ஆற்றில் குதித்து காதலர்கள் தற்கொலை
பெலகாவி: திருமணமான இளைஞரும், அவரது காதலியும் மல்லபிரபா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பெலகாவி மாவட்டம், ராமதுர்கா தாலுகாவின், மல்லாபுரா கிராமத்தில் வசித்தவர் ஜெகதீஷ் யல்லப்பா கவளே, 27. இவரும் இதே கிராமத்தில் வசித்த கங்கம்மா, 25, என்பவரும், மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். இதை அறிந்த குடும்பத்தினர் காதலர்களை கண்டித்தனர். திருமணம் செய்து வைக்கவும் சம்மதிக்கவில்லை. இதற்கிடையே ஜெகதீஷ்க்கு பெற்றோர் வேறொரு பெண்ணை ஓராண்டுக்கு முன், திருமணம் செய்து வைத்தனர். ஆனாலும், அவரால் காதலியை மறக்க முடியவில்லை. ஜனவரி 26ம் தேதி இரவு, ஜெகதீஷும், கங்கம்மாவும் வீட்டை விட்டு வெளியேறினர். கிராமத்தின் புறநகரில் உள்ள பாலத்தின் மீது ஏறி நின்றனர். இருவரும் துப்பட்டாவை இடுப்பில் கட்டி கொண்டு, மல்லப்பிரபா ஆற்றில் குதித்தனர். இருவரையும் காணாமல் பெற்றொர் தேடினர். ராமதுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை இருவரின் உடல்களும் ஆற்றில் மிதப்பது தெரிந்தது. இதையறிந்த போலீசார், அங்கு சென்று இருவரின் உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர்.