மாலுார் காங்., - எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா பதவி தப்பியது
தங்கவயல்: மறு ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற்றதன் மூலம், மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடாவின் பதவி தப்பி உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2023 ல் நடந்த தேர்தலில், கோலாரின் மாலுார் தொகுதியில் காங்கிரசின் நஞ்சேகவுடா வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். இவர் 50,955 ஓட்டுகளும், பா.ஜ.,வின் மஞ்சுநாத் கவுடா 50,707 ஓட்டுகளும் வாங்கினர். வெறும் 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் நஞ்சேகவுடா வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் தேர்தலில் முறைகேடு செய்து நஞ்சேகவுடா வெற்றி பெற்றதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மஞ்சுநாத் கவுடா வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ம் தேதி தீர்ப்பு கூறினார். நஞ்சேகவுடாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்ததுடன், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தி, நான்கு வாரங்களுக்குள் முடிவை அறிவிக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நஞ்சேகவுடா மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வு விசாரித்தது. நஞ்சேகவுடாவின் வெற்றி செல்லாது என்று அறிவித்த, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தி அதன் முடிவுகளை, சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் தேதி மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதன் முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில், உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, சீல் வைக்கப்பட்ட உறை திறக்கப்பட்டு அதில் இருந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நஞ்சேகவுடா 50,957 ஓட்டுகளும், மஞ்சுநாத் கவுடா 50,707 ஓட்டுகளும் பெற்றதாகவும், நஞ்சேகவுடா 250 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர். 2023 ல் தேர்தல் நடந்த போது கிடைத்த ஓட்டுகளை விட, தற்போது 2 ஓட்டுகளை கூடுதலாக நஞ்சேகவுடா பெற்று உள்ளார். இதன்மூலம் அவரது எம்.எல்.ஏ., பதவியும் தப்பி உள்ளது.