உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சாக்கடையில் கிடந்த பெண் உடல் தீர்த்து கட்டிய கள்ளக்காதலன் கைது

 சாக்கடையில் கிடந்த பெண் உடல் தீர்த்து கட்டிய கள்ளக்காதலன் கைது

தேவனஹள்ளி: சாக்கடை கால்வாயில் பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்த வழக்கில், கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார். திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரியவந்தது. பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியில் கடந்த மாதம் 25 ம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மீட்கப்பட்டது. அவரை யாரோ கொலை செய்து உடலை எரித்தது தெரிந்தது. விசாரணையில், இறந்து கிடந்த பெண் நிர்மலா, 35 என்பது தெரிந்தது. இந்த வழக்கில், பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் பாதுகாவலராக வேலை செய்த மவுனேஷ், 37 நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது கொலையான நிர்மலா கணவரை பிரிந்து, தனது 12 வயது மகளுடன், தேவனஹள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்தார். ஹோட்டலில் ஊழியராக வேலை செய்தார். ராய்ச்சூரை சேர்ந்த மவுனேஷ், விமான நிலையத்தில் வேலை செய்தார். தேவனஹள்ளியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராய்ச்சூர் சென்றார். இந்நிலையில், ஹோட்டலில் சாப்பிட சென்ற போது மவுனேஷுக்கும், நிர்மலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். மனைவி வீட்டில் இல்லாததால், நிர்மலாவை தனது வீட்டிற்கே அழைத்து சென்று மவுனேஷ் தங்க வைத்தார். இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து உள்ளனர். இந்நிலையில், பிரசவத்திற்காக சென்றிருந்த மவுனேஷ் மனைவி இம்மாதம் தேவனஹள்ளிக்கு வருவதாக கணவரிடம் கூறினார். இதனால் நிர்மலாவை வீட்டில் இருந்து வெளியேறும்படி மவுனேஷ் கூறி உள்ளார். இதற்கு மறுத்த நிர்மலா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். கடந்த மாதம் 21ம் தேதி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் நிர்மலாவின் கழுத்தை நெரித்து கொன்ற மவுனேஷ், உடலை போர்வையில் சுற்றி நான்கு நாட்கள் வீட்டில் வைத்திருந்தார். பின், இரவோடு, இரவாக பைக்கில் உடலை எடுத்து சென்று, சாக்கடை கால்வாய் கரையோரம் போட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ