ரூ.2.38 லட்சம் இழந்தவர் துாக்கிட்டு தற்கொலை
சாம்ராஜ் நகர் : 'ஆன்லைன்' மோசடி வலையில் சிக்கி, பணத்தை இழந்த நபர் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவின், காமகெரே கிராமத்தில் வசித்தவர் ராஜப்பா, 35. இவர் தொழில் நடத்த கடன் பெற முயற்சித்து வந்தார். சில நாட்களுக்கு முன், ஆன்லைனில் தேடும் போது, 'தனி கேப்பிடல்ஸ்' என்ற நிறுவனம், குறைந்த வட்டிக்கு 15 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பதாக வெளியிட்ட அறிவிப்பை கவனித்தார். அந்நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, கடன் பெ ற 2.38 லட்சம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என, நிறுவனத்தினர் கூறினர். இதை நம்பிய ராஜப்பா, ஆன்லைன் மூலம், 2. 38 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன்பின் நிறுவனத்திடம் இருந்து பதிலேதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், பரிசீலித்த போது அது மோசடி நிறுவனம் என்பது தெரிந்தது. பணத்தை செலுத்தி ஏமாந்ததால், மனம் நொந்த ராஜப்பா, நேற்று அதிகாலை செல்பி வீடியோ பதிவு செய்து வைத்து, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளேகால் போலீசார் விசாரிக்கின்றனர்.