உடற்பயிற்சி கருவியால் அடித்து மேலாளர் கொலை
கோவிந்த்ராஜ்நகர்: வேலை நேரத்தில் விளக்கை அணைத்து விளையாடியதால் ஏற்பட்ட தகராறில், தனியார் நிறுவன மேலாளர், உடற்பயிற்சி கருவியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். போலீசில் கொலையாளி சரண் அடைந்தார். பெங்களூரு, கோவிந்த்ராஜ்நகர் சரஸ்வதி நகரில், சினிமா படப்பிடிப்புகளில் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களை 'ஹார்ட் டிஸ்க்'குகளில் பதிவேற்றும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சித்ரதுர்காவை சேர்ந்த பீமேஷ் பாபு, 41, மேலாளராக வேலை செய்தார். ஆந்திரா விஜயவாடாவின் சோமலவன்ஷி, 24, உட்பட 6 பேர், அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். நாயண்டஹள்ளியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, புகைப்படம், வீடியோக்களை 'எடிட்' செய்யும் வேலை இருந்ததால் பீமேஷ் பாபுவும், சோமலவன்ஷியும் அலுவலகத்தில் இருந்தனர். நேற்று அதிகாலை 1:30 மணியளவில் அலுவலக விளக்கை அணைத்து சோமலவன்ஷி விளையாடினார். கோபம் அடைந்து பீமேஷ் பாபு திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சோமலவன்ஷி, அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார். அலுவலகத்தின் அருகே உள்ள மேலாளர் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த 'தம்புல்ஸ்' எனும் உடற்பயிற்சி கருவியை எடுத்து வந்து, பீமேஷ் பாபு தலையில் அடித்தார். தலையில் பலத்த காயம் அடைந்தவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சோமலவன்ஷி, தன்னுடன் பணி செய்யும் ஊழியரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். இருவரும் சேர்ந்து ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வந்ததும், அதில் இருந்த மருத்துவ ஊழியர், பீமேஷ் பாபுவை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த சோமலவன்ஷி நேராக, கோவிந்த்ராஜ்நகர் போலீஸ் நிலையம் சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார்.